For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அட்டகாசமான அம்சங்கள் - விரைவில் அசத்த வருகிறது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் - சிறப்பு கட்டுரை!

07:00 PM Dec 25, 2024 IST | Murugesan M
அட்டகாசமான அம்சங்கள்   விரைவில் அசத்த வருகிறது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்   சிறப்பு கட்டுரை

இந்தியாவில் விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின், பொதுமக்களின் ரயில் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

Advertisement

இப்போது, இந்தியா முழுவதும் 136 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. குறுகிய மற்றும் நடுத்தர தூர வழித்தடங்களில் மின்மயமாக்கப்பட்ட நெட்வொர்க்கில் இந்த வந்தே பாரத் இரயில் சேவைகள் உள்ளன. மேலும், வந்தே பாரத் CHAIR CAR ரயில்கள், பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த வந்தே பாரத் ரயில்கள் வரிசையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் ரயில்களை அடிப்படையாகக் கொண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் இருக்கும் BEML நிறுவனத்தில் தான் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன பயணிகளின் வசதிகளைக் கருத்தில் கொண்டு இந்த ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளின் முன்மாதிரியை வெளியிட்டிருக்கும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விரைவில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

800 முதல் 1,200 கிலோமீட்டர் வரை உள்ள நீண்ட தூரத்தை, ஒரே இரவில் பயணம் செய்ய கூடிய வகையில், இந்த இரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டவையாகும். எனினும், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை மட்டுமே இந்த ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்புக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் முழுவதும் துருப்பிடிக்காத இரும்பினால் கட்டமைக்கப் பட்டுள்ளது.

11 ஏசி 3 TIER பெட்டிகள், 4 ஏசி 2 TIER பெட்டிகள் மற்றும் 1 ஏசி FIRST CLASS என ஒரு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் உள்ளன. ஒரு ரயிலில், படுக்கை வசதியுடனான கூடிய 823 இருக்கைகள் உள்ளன. பயணிகளுக்குத் தேவையான பல்வேறு நவீன வசதிகள் அமைக்கப் பட்டுள்ளன.

பெர்த்களில் மேம்படுத்தப்பட்ட குஷனிங் மற்றும் மேல் மற்றும் மிடில் பெர்த்களில் ஏற வசதியான ஏணிகள் உள்ளன. பெட்டிகளுக்குள் தூய்மையான சூழலுக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளில் முழுமையாக சீல் செய்யப்பட்ட கேங்வேகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லவதற்கு தானியாங்கி கதவுகள் மற்றும் ஒவ்வொரு பெட்டிக்கும் Emergency Talk Back Unit என்ற கருவி உள்ளது. இதன் மூலம் முன்பகுதியில் உள்ள லோகோ பைலட்டிடம் பேச முடியும் அதற்கு அவர்கள் பதில் அளிக்க கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் முழுவதுமே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. அது தவிர அனைத்து பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள் உள்ளன. சென்சார் மூலம் இயக்கப்படும் விளக்குகள், தானியங்கி கதவுகள் மற்றும் அதிநவீன கழிவறைகள் இந்த இரயிலில் உள்ளன.

வைஃபை மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், USB சார்ஜிங் வசதி, மற்றும் ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் அமைப்புகள் பாதுகாப்பு என பல சிறப்பம்சங்கள் இந்த இரயிலில் உள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெர்த்கள் மற்றும் பிரத்யேக கழிப்பறைகள் மற்றும் USB சார்ஜிங் வசதியுடன் ஒருங்கிணைந்த READING LIGHTS ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் இருப்பது போல இதிலும் KAVACH பாதுகாப்பு அமைப்பே இடம் பெற்றுள்ளது. மேலும், ஆண்டி-கிளைம்பிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விபத்துகளின் போது பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக குவிவதைத் தடுக்கும்.

மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மேம்பட்ட பயணிகள் வசதி ஆகிய சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், மலிவான மற்றும் வசதியான நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக தயாரிக்கப் பட்டுள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்படும் என்றும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகமாகி, 18 மாதங்களுக்குப் பிறகு மாதத்துக்கு 2 அல்லது 3 ரயில்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement
Tags :
Advertisement