அணு ஆயுத இருப்பை அதிகரிக்கும் இந்தியா!
சீனாவும், பாகிஸ்தானும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், இந்தியா, தனது அணுஆயுத இருப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது. 2024ம் ஆண்டு ஜனவரி நிலவரப் படி, இந்தியாவிடம் எவ்வளவு அணுஆயுதங்கள் இருக்கின்றன என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (SIPRI) என்ற அமைப்பு சர்வதேச அளவில் ஏற்படும் மோதல்கள், ஆயுதங்கள், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதங்களை செயலிழக்க வைக்கும் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.
சுவீடன் அரசு ஆதரவுடன் செயல்படும் இந்த அமைப்பு, 2024 ஆண்டுக்கான அறிக்கையைப் புத்தகமாக அண்மையில் வெளியிட்டுள்ளது. அந்த ஆண்டு புத்தகத்தில் பொதுவாக, ஆயுதங்கள், மற்றும் சர்வதேச பாதுகாப்பு பற்றிய தரவுகளுடன், உலகம் முழுவதும் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கைகள் பற்றியும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 172 அணு ஆயுதங்கள் இருப்பு உள்ளதாகவும், முந்தைய ஆண்டை விட 8 அணு ஆயுதங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) உற்பத்தி செய்யப்படும், புளூட்டோனியத்தை அடிப்படையாகக் கொண்டு அணுஆயுதங்களை இந்தியா தயாரிக்கிறது என்று கூறியுள்ள இந்த ஆய்வறிக்கை, கடந்த பத்தாண்டுகளில் இந்தியா தனது அணுசக்தி திறன்களை நவீனப் படுத்தியதோடு, விரிவுபடுத்தியும் இருக்கிறது என்று தெரிவிக்கிறது. எதிரிகளின் தாக்குதல்களைத் தடுப்பதற்காகவே, இந்தியா அணுஆயுத தயாரிப்பில், தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல்கள் நடத்தும் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுப்பது ஒருபுறம் என்றாலும், சீனாவின் தாக்குதல்களை எதிர்கொள்ளவும் அணுஆயுத இருப்பை இந்தியா அதிகப்படுத்தி வருகிறது.
இப்போதுள்ள நிலையில், சீனா முழுவதும் உள்ள அனைத்து இலக்குகளைக் குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர சென்று தாக்கும் அணு ஆயுதங்களுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் தெரியவருகிறது.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி பாகிஸ்தான், முந்தைய ஆண்டு வைத்திருந்த அதே அளவிலேயே, மொத்தம் 170 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கக்கிறது என்று தெரிவித்துள்ள இந்த ஆய்வறிக்கை, மொத்தம் 500 அணு ஆயுதங்கள் சீனாவிடம் உள்ளன என்று தெரிவிக்கிறது.
சென்ற ஆண்டு சீனாவிடம் 410 அணுஆயுதங்களே இருந்தன. இப்போது சீனா 90 புதிய அணு ஆயுதங்களை இராணுவத்தில் இணைத்துள்ளது.
மேலும் 'மற்ற எந்த நாட்டையும் விடவும் வேகமாக அணுஆயுத கிடங்கை, சீனா விரிவுபடுத்துகிறது' என்று அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின் (FAS) அணு தகவல் திட்டத்தின் இயக்குனரான Hans M. Kristensen கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகளும் அணுஆயுத நாடுகளாகும்.
உலகளவில் 12,121 அணு ஆயுதங்கள் இந்த நாடுகளிடமே உள்ளன. அவற்றில் இராணுவ கையிருப்புகளில் உடனடி பயன்பாட்டிற்காக சுமார் 9,585 அணு ஆயுதங்கள் உள்ளன என்றும் , மேலும் 3,904 ஏவுகணைகள் விமானங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், பல்வேறு கடல் நிலைகளில் நிலைநிறுத்தப்பட்ட 2,100 போர்க்கப்பல்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல்கள் அனைத்தும் ரஷ்யா அல்லது அமெரிக்காவைச் சேர்ந்தவை என்றும் இந்த ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது.
உலகின் மிகப்பெரிய அணு ஆயுதங்கள் கொண்ட நாடாக ரஷ்யா உள்ளது. ரஷ்யாவை தொடர்ந்து அணுஆயுத வரிசையில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ரஷ்யாவிடம் 5,580 அணு ஆயுதங்கள் உள்ளன என்றும் அமெரிக்காவிடம் மொத்தம் 5,044 அணு ஆயுதங்கள் உள்ளன என்றும் மொத்தத்தில், உலகில் உள்ள அனைத்து அணு ஆயுதங்களில் 90 சதவிகிதம் அணு ஆயுதங்கள் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் இருப்பதும் தெரியவந்துள்ளது.