அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு ; அதிமுக நிர்வாகி, காவல் ஆய்வாளர் கைது!
சென்னை அண்ணாநகர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக வட்டச் செயலாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் 10 வயது சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கண்டறிந்தனர். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால், புகாரை வாங்க மறுத்ததுடன், குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் செயல்பட்டதாக சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டனர். இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. மேலும், சிறுமியின் தாயார், உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
பின்னர், உச்சநீீதிமன்ற உத்தரவுப்படி, டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஏற்கனவே, 14 வயது சிறுவன் மற்றும் சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுக 103-வது வட்ட செயலாளர் சுதாகர் மற்றும் அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.