அண்ணா பல்கலைகழக மாணவிக்கு நீதி கேட்டு போராட்டத்திற்கு சென்ற பாஜகவினர் கைது!
அண்ணா பல்கலைகழக மாணவிக்கு நீதி கேட்டு போராட முயன்ற பாஜக-வினர் மீதான கைது நடவடிக்கை, அராஜகத்தின் உச்சகட்டம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் முதுநிலை மாணவி ஒருவர், பல்கலைக்கழக வளாகத்தினுள்ளேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பல்கலைக்கழகத்தின் வெளியே பிரியாணிக்கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர்.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக-வினரை, அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், நீதி கேட்டு போராட முயன்ற பாஜக-வினரை கைது செய்ய முனைப்பு காட்டும் போலீசார், பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாதுகாப்பு வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். பாஜக-வினர் மீதான கைது நடவடிக்கை அராஜகத்தின் உச்சகட்டம் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.