அண்ணா பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு அதிமுகவினர் சாலை மறியல் - ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தமிழக அரசை கண்டித்து, அண்ணா பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு அதிமுக-வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை போலீசார் தடுக்க முற்பட்டனர். அப்போது சாலையின் சென்டர் மீடியனில் ஏறி நின்ற முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 100-க்கும் மேற்பட்ட அதிமுக-வினரை போலீசார் கைது செய்து, வாகனங்களில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், திமுக-வின் திறனற்ற ஆட்சியில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக குற்றம் சாட்டினார்.