அண்ணா பல்கலை. நிர்வாகம், காவல் துறை தரப்பிலும் குளறுபடிகள்: மம்தா குமாரி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையத்தால் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு, ஆய்வறிக்கையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் சமர்ப்பித்தது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதைத் தாமாக முன்வந்து விசாரித்த தேசிய மகளிர் ஆணையம், உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது. அக்குழு அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக விசாரித்து ஆய்வறிக்கையை ஆளுநர் ஆர்.என். ரவியிடம் சமர்ப்பித்தது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குழு உறுப்பினர் மம்தா குமாரி,
விசாரணையின் நிலையறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்ததாகவும், தேசிய மகளிர் ஆணையத்திடமும் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அண்ணா பல்கலைக் கழக நிர்வாகம் மற்றும் காவல் துறை தரப்பிலும் சில குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.