அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தலைமை நீதிபதியின் அனுமதிக்காக சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் வரலட்சுமி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், போலீசாரின் விசாரணையில் குறைபாடு உள்ளதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
கடிதத்தை ஆய்வு செய்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லக்ஷ்மி நாராயணன் அமர்வு, மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தனர்.
இந்த வழக்கில் உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டனர்.
அத்துடன் வழக்கை தலைமை நீதிபதி அனுமதிக்காக பரிந்துரை செய்வதாகவும், அனுமதி பெற்ற பிறகு விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதனிடையே அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், வன்கொடுமை தொடர்பாக காவல்துறையின் விசாரணை விவரங்களை சீலிட்ட கவரில் விரைவில் தாக்கல் செய்வதாக உறுதியளித்தார்.