அண்ணா பல்கலை மாணவி வழக்கு : FIR கசிந்தது எப்படி?- உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோது FIR தகவல்கள் கசிந்தது எப்படி? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Advertisement
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட கவரில் காவல்துறை தாக்கல் செய்தது.
அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே தவறு இருப்பதுபோல் FIR உருவாக்கப்பட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், பெண்ணின் பெயரை ஏன் வெளியிட்டீர்கள் எனவும் வினவினர்..
இதுபோன்ற காரணங்களால் மக்கள் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வருவதற்கே பயப்படும் நிலை உள்ளதாகவும் கவலை தெரிவித்தனர். வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோது FIR கசிந்தது எப்படி? எனவும், முடக்கப்பட்ட பின் FIR-ஐ எப்படி மற்றவர்கள் பார்க்க முடியும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், IPC-யில் இருந்து BNS சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக FIR வெளியாகி விட்டதாக கூறினார். சிட்டிசன் போர்ட்டல் மூலம் FIR-ஐ 14 பேர் ஆன்லைனில் பார்த்துள்ளதாகவும், அவர்கள் செல்போன் எண்ணை சேகரித்துள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.