அண்ணா பல்கலை மாணவி வழக்கு - நாளை விசாரணையை தொடங்குகிறது தேசிய மகளிர் ஆணையம்!
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணையை தொடங்குகிறது.
Advertisement
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 2 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரக்தகர் உத்தரவிட்டார். இந்நிலையில், உண்மை கண்டறிவும் குழுவினர் நாளை சென்னை வருவதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கு தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை தேசிய மகளிர் ஆணையத்துக்கு இந்தக் குழு பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.