அண்ணா பல்கலை மாணவி விவகாரம் - பேரவையில் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு!
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தமிழக அரசு மீது குற்றம்சாட்டினர்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் பேசும்போது, முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்தது, பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க அச்சப்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்த பிரச்னையில் ஆளும் கட்சியின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பிய அவர், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவதாகவும், திமுகவினர் போராடினால் கைது செய்யப்படுவதில்லை எனவும் விமர்சித்தார். மேலும், ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா எனவும் அவர் வினவினார்.
பாஜக சார்பில் பேசிய எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி, மாணவர்களின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ”யார் அந்த சார்” என்பதை கண்டுபிடிப்பதோடு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி கூறினார்.