பாஜக கூட்டணியில் இருந்த போது தமிழகத்திற்கு பல திட்டங்களை அதிமுக கொண்டு வந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு, தற்போது வரை துரோக சரித்திரமாக நீண்டு கொண்டு இருப்பதாக விமர்சித்துள்ளார்.
PM Shri திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் திமுகவுக்கு, அதிமுகவை பற்றி பேச எள்ளளவாவது அருகதை உள்ளதா என்றும், மீத்தேன்- ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு டெல்டா விவசாயிகளின் உரிமையை அடகு வைத்தது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதும், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம் போன்ற அறிவிப்புகளால் தமிழகத்தை காத்த இயக்கம் அதிமுக என்றும், மத்திய அரசின் அனைத்து ஆய்வறிக்கைகளிலும் அன்று முன்னிலை வகிக்க ஒரே காரணம் அதிமுக மக்களுக்கான ஆட்சி நடத்தி தமிழ்நாடு மாடல் ஆட்சியாக திகழ்ந்ததுதான் எனவும் கூறியுள்ளார்.
மேலும், தன்னுடன் நேருக்கு நேர் நின்று முதலமைச்சர் தனியாக விவாதிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி , அதற்கான தெம்பும், திராணியும் உள்ளதா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.