அநீக்கு எதிரான குரல் தொடர்ந்து ஒலிக்கும் - ஆதவ் அர்ஜுனா உறுதி!
‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அநீக்கு எதிரான குரல் தொடர்ந்து ஒலிக்கும் என தெரிவித்துள்ளார்.
பட்டியல் சமூகம் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியல் என தெரிவித்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரசாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட போவதாகவும், கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிப்பதாகவும் அறிக்கையில் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.