“அந்த சார் யார்“ என கேள்வி எழுப்பி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டும், கைதான ஞானசேகரன் குறிப்பிட்ட “அந்த சார் யார்“ என கேள்வி எழுப்பியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட தலைமை தபால் நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அதிமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் வீரப்பன் சத்திரம் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதேபோல், சத்தியமங்கலம் பேருந்து நிலையம் எதிரே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.