For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தை வெளிப்படுத்துகிறது - மருத்துவர் ராமதாஸ்

05:26 PM Nov 13, 2024 IST | Murugesan M
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தை வெளிப்படுத்துகிறது    மருத்துவர் ராமதாஸ்

அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தை வெளிப்படுத்துதாக  பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தால் வரவேற்கத் தக்கது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பின்னாளில் இத்திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு, சாத்தியமற்ற தகுதிகளை நிர்ணயித்து, அதை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.

Advertisement

அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 1 கோடியே 20 லட்சத்திற்கும் குறைவான குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் தான் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திமுக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், எந்த நிபந்தனையும் இல்லாமல் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இத்தகைய சூழலில் தான் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக மக்களிடையே கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. அதனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்திற்கு ஆளாகியிருப்பதால் தான் இப்படியொரு அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது.

அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான். ஆனாலும், திமுக அரசின் இத்தகைய நாடகங்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள்.

2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக, அதன் பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான் 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கியது.

அதன் பின்னர், தேர்தல் தோல்வி அச்சத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அனைவருக்கும் வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. திமுக அரசின் உண்மை நோக்கத்தை மக்கள் நன்கு அறிவார்கள். இதைக் கண்டு ஏமாற மாட்டார்கள். 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வீழ்த்தப்படுவது உறுதி என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement