அனைவருக்கும் நீதி கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் - மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட கிருஷ்ணகுமார் வலியுறுத்தல்!
நாட்டில் அனைவருக்கும் நீதி கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார் வலியுறுத்தினார்.
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கு, உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கலந்துகொண்டு பேசுகையில், மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப, அங்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் கிருஷ்ணகுமார், தனது ராஜாங்க திறமைகளை கொண்டு அரசுக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதேபோல், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேசுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த 8 ஆண்டு காலத்தில் 28 ஆயிரத்து 248 பிரதான வழக்குகளை நீதிபதி கிருஷ்ணகுமார் முடித்து வைத்துள்ளதாக பாராட்டினார்.
இதனை தொடர்ந்து ஏற்புரையாற்றிய நீதிபதி கிருஷ்ணகுமார், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் புதிய அத்தியாயம் சவால் நிறைந்தது என தெரிவித்தார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீதித்துறையை மேம்படுத்த வேண்டும் என்றும் நீதி கிடைக்காமல் எந்த குடிமகனும் இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.