செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அபாயமான காற்று மாசு மூச்சு திணறும் டெல்லி!

03:49 PM Nov 12, 2024 IST | Murugesan M

உலக அளவில் மிகவும் மாசடைந்த நகரங்களில் முதல் இடத்தை பாகிஸ்தானின் லாகூர் உள்ளது. அதற்கு அடுத்த படியாக, இரண்டாவது இடத்தில இந்தியாவின் தலைநகர் டெல்லியுள்ளது. அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

இந்தியாவின் தலைநகர் டெல்லியின் காற்றின் தரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு 10 நாட்களுக்கும் மேலாக மாநிலத்தின் பல பகுதிகள் புகை மூட்டத்தால் மூடப்பட்டிருக்கிறது.

வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் படி, தேசிய தலைநகரில் காற்றின் தரம் நவம்பர் இறுதி வரை மிகவும் மோசமான பிரிவிலேயே இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 400ஐ தொட்டிருக்கிறது. குறிப்பாக, டெல்லி காற்றின் மாசு, 10 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அலிபூரில் 372, பவானாவில் 412, துவாரகா செக்டார் எட்டில் 355, முண்ட்காவில் 419, நஜப்கரில் 354, நியூ மோதி பாக்கில் 381, ரோஹினியில் 401, பஞ்சாபி பாக்கில் 388 மற்றும் ஆர்.கே. புரத்தில் 373 என இந்தப் பகுதிகள் அனைத்தும் மிகவும் மோசமான காற்றின் தர குறியீடு பதிவாகி உள்ளது. கலிந்தி குஞ்ச் பகுதியில், காற்றின் மாசு அதிகரித்துள்ளதால், யமுனை நதியில் அடர்த்தியான நச்சு நுரை மிதந்து வருகின்றன. இதனால், டெல்லியில் சுகாதார சீர்கேடு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் காற்று மாசினால்,பொது மக்கள் பல்வேறு உடல்நல பாதிப்புக்களுக்கு ஆளாகின்றனர்.

டெல்லியில், சில பகுதிகளில் கொஞ்ச நேரம் வெளியில் நின்றாலே, கண் எரிச்சல் வருவதாக குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர். மேலும், தும்மல்,இருமல், மூக்கில் நீர்வடிதல் உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் டெல்லி மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காற்றின் மாசினால், உடல்நலம் பாதிக்கும் என்று தெரிந்தும், வேலைக்காக வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, உடலை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணிந்துகொண்டு செல்லவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தீபாவளி கொண்டாட்டத்தின் போது காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை எப்படி மீறப்பட்டது என டெல்லி மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாசுபாட்டைச் சமாளிப்பதை உறுதி செய்வதற்கும், நகரில் பட்டாசு தடையை அமல்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு டெல்லி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தி பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கும், டெல்லி காவல்துறை ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், விவசாய நிலங்களில் அறுவடைக்குப் பின்பு மிஞ்சும் கழிவுகளை எரிப்பதால் டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில், விவசாய கழிவுகளை எரித்தால், விதிக்கப்படும் அபராதத்தை 2 மடங்காக உயர்த்தி மத்திய அரசு கடந்த வாரம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இது வரை 2 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கழிவுகளை எரித்தால் 2,500 ரூபாயும், 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் 5,000 ரூபாயும், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகள் 15,000 ரூபாயும் அபராதம் செலுத்தி வந்தனர்.

இனிமேல் அவர்கள் முறையே 5,000, 10,000, 30,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், டெல்லியில் காற்று மாசு குறையும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

Advertisement
Tags :
delhiDelhi is suffocating due to dangerous air pollution!FEATUREDMAIN
Advertisement
Next Article