அமரன் திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகள் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
'அமரன்' திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி அமரன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு மட்டுமின்றி 'அமரன்' திரைப்படம் வெளியாகியுள்ள அனைத்து இடங்களிலும் குடும்பம் குடும்பமாக பார்த்து நெகிழ்ந்து பாராட்டி வருவதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் தியாக வரலாறு, தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் ஆழமாக சென்று சேருவதையும், மக்களிடம் தேசபக்தி பொங்கி எழுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாத சில சக்திகள், 'அமரன்' திரைப்படத்திற்கு எதிராக வன்மத்தை கக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிளக்கத் துடிக்கும் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளை 'மண்ணுரிமைப் போராளிகள்' என்று போற்றுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
'அமரன்' திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக 'அமரன்' திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.