செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமெரிக்காவின் வர்த்தக போர் : சீனாவிற்கு இறுகும் பிடி - சாதகமாக்க துடிக்கும் இந்தியா!

12:50 PM Jan 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

2 வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் முதன்மை உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்காவை மாற்றுவேன் என உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பல்வேறு நாடுகளுக்கு எதிராக வர்த்தக போரையும் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அதிரடி உத்தரவுகள், இந்தியாவைப் பாதிக்குமா ? ட்ரம்பின் வரிவிதிப்பு அஸ்திரத்தை இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

47வது அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 60 சதவீத வரியையும் , கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியையும் விதிப்பதாக தெரிவித்திருக்கிறார். ( BRICS ) பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியில் வர்த்தகம் செய்தால், அந்த நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கனடா, மெக்சிகோ நாடுகளுக்கான 25 சதவீத வரிவிதிப்பு, வரும் பிப்ரவரி 1ம் தேதி நடைமுறைக்கு வருகிறது. மேலும், சீனா மீதான வரிவிதிப்பை, இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. அதற்கு பிறகு இந்தியா மீதான வரி விதிப்பையும் ட்ரம்ப் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

கடந்த பல ஆண்டுகளாகவே, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. கடந்த நிதியாண்டில், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

அமெரிக்காவுடனான வர்த்தக உபரி கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 9.8 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது.

குறிப்பாக, இயந்திரங்கள், மருந்துகள், மின்னணுவியல் மற்றும் செமி கண்டக்டர் போன்ற துறைகளில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகள் மிக பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிக்கும் பட்சத்தில் அது இரு தரப்பு வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உபரியைக் குறைக்க, ட்ரம்ப் அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்கொள்ள பிரதமர் மோடி அரசு தயாராகவே இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து விஸ்கி போன்ற மது வகைகள், எஃகு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்யவும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை குறைக்கவும் இந்தியா திட்டமிட்டுளளதாக தெரிய வருகிறது.

கூடுதலாக,சோயாபீன்ஸ், பால் பொருட்கள், வாகனங்கள், மருத்துவ கருவிகள், விமானங்கள் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் இந்தியா வாங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அமெரிக்காவுடன் ஒரு வரையறுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய 18 ஆயிரம் பேரை இந்தியா திரும்பப் பெற ஒப்புக்கொண்டுள்ளது. இது, ட்ரம்ப் அரசைச் சமாதானப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முடிவாகவே கருதப்படுகிறது.

அடுத்த 100 நாட்களுக்குள் சீனாவுக்கு செல்ல விரும்புவதாக தனது அதிகாரிகளிடம் அதிபர் ட்ரம்ப், தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு அழைப்பு விடுத்தது, சீன செயலியான டிக் டாக்கை அமெரிக்காவில் தடை செய்யும் முடிவை தள்ளி வைத்தது, இவை எல்லாம், சீனா மீதான அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது , அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகவும் வரிகளின் அரசன் இந்தியா என்றும் கடுமையாக ட்ரம்ப் விமர்சனம் செய்திருந்தார். முன்னதாக, தனது முதல் ஆட்சிக் காலத்தில், 2018ம் ஆண்டு, இந்தியாவின் ஸ்டீல், அலுமினியம் போன்ற பொருட்களுக்கு அதிக வரி விதித்து நடவடிக்கை எடுத்திருந்தார்.

உடனே, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் ஆப்பிள், வால்நட் போன்ற 26 பொருட்களுக்கு இந்தியா வரி விதித்தது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஆன வர்த்தகப் போட்டியைத் தனக்கு சாதகமாக மாற்ற இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே, ட்ரம்ப் நிர்வாகத்துடன் மோதும் போக்கை இந்தியா கடைபிடிக்காது என்றே பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Advertisement
Tags :
A tight grip on China India is scrambling to take advantageAmerica's trade warchinadonald trump 2025FEATUREDIndianMAINPM Modiusa
Advertisement