அமெரிக்க அதிபராக பதவியேற்றார் ட்ரம்ப் - பிரதமர் மோடி வாழ்த்து!
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக்கொண்டார்.
Advertisement
கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றார். அவருக்கான பதவியேற்பு விழா வாஷிங்டனில் நடைபெற்றது. அரங்கிற்கு வருகை தந்த ட்ரம்பை, ஜோ பைடன் கைக்குலுக்கி வரவேற்றார்.
முதலாவதாக, அமெரிக்காவின் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்றுக்கொண்டார். இவரது மனைவி உஷா, ஆந்திராவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, டொனால்ட் டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், 78 வயதான ட்ரம்ப், அமெரிக்காவின் 47வது அதிபரானார்.
டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து, பீரங்கி குண்டுகள் முழங்க அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொழிலதிபர் எலான் மஸ்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா, பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்பு-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள தனது அன்பு நண்பர் டொனால்டு டிரம்புக்கு வாழ்த்து என குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு நாடுகளும் பயன் அடைவதற்கும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும், மீண்டும் ஒருமுறை தங்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக மோடி கூறியுள்ளார்.