அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க சதி : உளவுத்துறை எச்சரிக்கை - சிறப்பு கட்டுரை!
அதிபர் தேர்தல் முடிவுக்கு பின் அமெரிக்காவில் வன்முறையை அரங்கேற்ற ரஷ்யா, சீனா, மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சதி செய்து வருவதாகவும், அமெரிக்காவில் உள் நாட்டு போரை உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் வேட்பாளராக, சுதந்திர கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள், அதிபர் தேர்தலுக்குப் பின் அமெரிக்காவில் வன்முறைப் போராட்டங்களை ஏற்படுத்த, ரஷ்யாவும் ஈரானும் ஈடுபட்டுள்ளன என்றும் அதற்கு சீனாவும் உதவுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்காக, வெளிநாட்டு உளவுத்துறை நிறுவனங்கள் வாக்கு பதிவுக்கு முன்னதாகவே அமெரிக்க மக்களிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் வேலைகளில்,அந்நாடுகள் இறங்கியுள்ளதாக குற்றசாட்டியுள்ள அமெரிக்க உளவுத் துறை, அமெரிக்காவில் போராட்டங்களையும் கலவரங்களையும் உருவாக்க, சில அமெரிக்கர்களையே ரஷ்ய இராணுவம், இந்த தேச துரோக பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டு அதிபர் தேர்தல் முடிவுக்குப் பின்னும் வன்முறைகள் நடந்தன. அதே மாதிரியான அரசியல் வன்முறைகள் வெடிக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.
தேர்தல் நாளுக்கும் புதிய அதிபர் பதவியேற்புக்கும் இடைப்பட்ட காலத்தில், அமெரிக்கா முழுவதும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும், அதிபர் தேர்தல் செயல்முறை குறித்த தவறான கருத்துக்களை பொய்யாக பரப்ப திட்டமிட்டுள்னனர் என்றும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதோடு, ஈரான் மீது கடுமையான புதிய தடைகளை ட்ரம்ப் தன் முந்தைய பதவி காலத்தில் விதித்தார்.மேலும், ஈரானின் ஆதரவு பெற்ற, குட்ஸ் படையின் தலைவரான காசிம் சுலைமானியை படுகொலை செய்ய அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், பாக்தாத்தில் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதன் காரணமாக ட்ரம்ப் மீது ஈரான் கடும் கோபத்தில் இருந்து வருகிறது.
இந்தமுறை,தேர்தல் பிரச்சாரத்தின் போது, டொனால்ட் டிரம்ப் மீது நடந்த படுகொலை முயற்சிகளுக்குப் பின் ஈரான் உள்ளது என்று, அமெரிக்க உளவு அதிகாரிகள் குற்றம் சாட்டி இருந்தனர். ரஷ்யாவைப் பொறுத்தவரை, வெள்ளை மாளிகைக்குச் செல்லும் போட்டியில் யார் வென்றாலும் அமெரிக்காவில் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது.
சமீப காலமாக, சீனாவுடனான அமெரிக்க உறவில் பெரும் விரிசல் விழுந்திருக்கிறது. மேலும், சீனாவில் உற்பத்தியாகும் மின்னணு பொருட்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கு 60 சதவீதத்துக்கும் மேல் வரி விதிக்கப் படும் என்று அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்திருக்கிறார். எனவே சீனாவும் அமெரிக்கா மீது அதிருப்தியில் உள்ளது.
இந்த அடிப்படையில், ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் ஒற்றுமையை சீர்குலைக்க பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த குற்றச் சாட்டுக்களை,ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் ஒட்டு மொத்தமாக நிராகரித்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், முக்கியமான இரண்டு இரு வேட்பாளர்களில் எவருக்கும் சாதகமான நிலை இருக்காது எனக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சில முக்கிய மாநிலங்களிலும் தேசிய அளவிலும், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாகவே இருக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுவதால், அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து,சட்ட ரீதியான போராட்டங்கள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையே, பேச்சு சுதந்திரம் மற்றும் துப்பாக்கி உரிமைகளை வரவேற்கும், தனது இணைய மனுவில் கையெழுத்திடுபவர்களுக்கு, அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் வரை குலுக்கல் முறையில் தினமும் ஒருவருக்கு 8.4 கோடி ரூபாய் பரிசை, உலகின் முன்னணி பணக்காரர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவருக்கும் இடையே அதிக போட்டி நிலவும் பெனிசில்வேனியா மற்றும் ஜார்ஜியா மாகாண வாக்காளர்களுக்கு மட்டும் இந்த ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் எலான் மஸ்க், பெனிசில்வேனியா-வில் நடைபெற்ற டிரம்பு பிரச்சாரப் பொதுக்கூட்ட மேடையில் ஒருவருக்கு 8.4 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ஏற்கனவே இந்த இணைய மனுவை கையெழுத்திடும் ஒவ்வொருவருக்கும் 47 அமெரிக்க டாலர் வழங்குவதாக உறுதியளித்துள்ள எலன் மஸ்க், தற்போது ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு 8.4 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்க தொடங்கியிருக்கிறார்.
எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எலான் மஸ்கின் இந்த நடவடிக்கை அமெரிக்க தேர்தல் விதிகளுக்கு மாறானது என்றும் , இதுபோன்று பணப்பரிசு வழங்குவதை தடை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பெரும் முதலாளிகளின் கையில் சிக்கி ஜனநாயகம் கேலிக்கூத்தாகி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளன