அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா : உள்ளரங்கில் நடைபெறுவது ஏன்? - சிறப்பு தொகுப்பு!
அமெரிக்காவில் நிலவும் கடும் குளிர் காரணமாக, அதிபர் பதவி ஏற்பு விழாவை பொதுவெளியில் நடத்தாமல்,உள்ளரங்கில் நடத்தப் படுகிறது.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், வரும் திங்கள் கிழமை அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
பொதுவாக,அதிபர் பதவி ஏற்பு விழா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் அருகே பொதுவெளியில் நடப்பது வழக்கம். ஆனால் , இம்முறை, நாட்டில் கடும் குளிர் நிலவுகிறது. குளிரால் மக்கள் பாதிப்படைவதைக் காண விரும்பாததால், பதவி ஏற்பு விழாவை பொதுவெளியில் நடத்தப் போவதில்லை என டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக அதிபர் பதவி ஏற்பு விழா மூடிய திடலில் நடக்கிறது. 1985 ஆம் ஆண்டில்,முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் பதவி ஈர்ப்பின் போது மைனஸ் 7 செல்ஸியஸ் என்ற அளவில் இருந்தது. அப்போதும் மூடிய திடலில் தான் பதவி ஏற்பு விழா நடந்தது. ட்ரம்ப் பதவி ஏற்கும் நாளில்,வெப்ப நிலை மைனஸ் 6 டிகிரி செல்ஸியஸ் இருக்கும் என்று அமெரிக்க தேசிய வானிலை சேவை அறிவித்துள்ளது.
முன்னதாக, 1841 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 9வது அதிபர் வில்லியம் ஹாரிசன் பதவி ஏற்ற நாளிலும் கடுமையான குளிர் காற்று வீசிய நிலையிலும் அவர், பொதுவெளியில் பதவி ஏற்றார். துரதிர்ஷடமாக பதவி ஏற்ற ஒரு மாதத்துக்குள்ளாகவே நிமோனியாவில் உயிரிழந்தார். வில்லியம் ஹாரிசன் தான், அமெரிக்காவில் மிக குறைந்த காலம் அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
பதவியேற்பு நாளான திங்கள் கிழமை,வாஷிங்டனில் உள்ள செயின்ட் ஜான்ஸ் தேவாலயத்தில் காலை ஆராதனையில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, நாடாளுமன்ற உள்ளரங்கில் , அதிபராக ட்ரம்பும், துணை அதிபராக ஜெ.டி .வான்ஸும் பதவி ஏற்று கொள்கிறார்கள்.
இந்நிலையில், பதவியேற்பு விழாவில் டிரம்ப், மறைந்த தனது தனது தாய் தனக்கு கொடுத்த பைபிள் மற்றும் மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள் ஆகியவற்றின் மீது உறுதிமொழி எடுக்க உள்ளார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதன்பிறகு, தனது முதல் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடுவதற்காக கேபிடல் கட்டிடத்தில் உள்ள அதிபர் மாளிகைக்கு செல்வதற்கு முன் நாட்டு மக்களுக்கு ட்ரம்ப் உரையாற்றுகிறார். டிக்கெட் வாங்கிய நபர்களுக்கு நேரடி ஒளிபரப்புகளைக் காண உள்ளரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.