அமெரிக்க நீதித்துறை மற்றும் பரிமாற்ற கமிஷனின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது - அதானி குழுமம் மறுப்பு!
அமெரிக்க நீதித்துறை மற்றும் பரிமாற்ற கமிஷன் ஆகியவை முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2020 முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஒடிசா, தமிழ்நாடு, ஜம்மு - காஷ்மீர், சத்தீஷ்கர் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றது. இதற்கான ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் 265 மில்லியன் டாலர் லஞ்சம் வழங்கியதாகவும், இதில் அமெரிக்க தொழிலதிபர்களை முதலீடு செய்ய வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் அதானி மீது அமெரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொழிலதிபர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இது இந்திய அதிகாரிகள் தொடர்புடைய வழக்கு என்ற போதிலும், அமெரிக்க முதலீட்டாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், அந்நாடு வழக்கு தொடர அமெரிக்க சட்டம் அனுமதிப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இதனை அதானி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் எனவும் அதானி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.