செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி : சிக்கலில்  சீன பொருளாதாரம்? - தடுமாறும் உலக வர்த்தகம்!

03:05 PM Apr 17, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி இலக்குகளைச் சீனா அடையுமா ? என்ற கேள்விக்கு எதிர்மறையாகவே பதில்கள் வருகின்றன. சீனாவின்,மொத்த உள்நாட்டு உற்பத்தி  நான்கு சதவீதத்தை எட்டுவதே சிரமம் என்று சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.  பொருளாதார சிக்கலில் தள்ளாடும்  சீனா தப்பிக்குமா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளாகச்  சீனாவும் அமெரிக்காவும் விளங்குகின்றன. உலகளாவிய வர்த்தகம், நிதிச் சந்தைகள் மற்றும் முதலீட்டுப் போக்குகளை நிர்ணயிப்பதில் இரு நாடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபரின் பங்கில் தான், இரண்டு பொருளாதாரங்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு  அமைந்திருக்கிறது.   கடந்த ஆண்டு, அமெரிக்காவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 86,600 அமெரிக்க டாலராக இருந்தது. இது அதிகமான தனிநபர் வருமான அளவைக் காட்டுகிறது.

Advertisement

இதற்கு நேர்மாறாக, சீனாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி  13,445  அமெரிக்க டாலராக இருந்தது.  இது நாட்டின் பொருளாதாரம் பெரியதாக இருந்தாலும், தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதையே காட்டுகிறது.

தொழில் துறையில், முன்னேற்றம் அடைந்திருந்தாலும், மக்களின் வாங்கும் சக்தியில் அமெரிக்காவை விடவும்   சீனா  பின்தங்கியுள்ளது. சீனாவின் பொருளாதாரம் கணிசமாக மந்தமடைந்துள்ளது . அரசு  கடன் சுமைகளால் திணறி வருகிறது. ரியல் எஸ்டேட் துறை கிட்டத்தட்ட முற்றிலும் சரிந்துவிட்டது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, மிகக் குறைவாக உள்ளது.

ஆனாலும், உயர் தொழில்நுட்பத் தொழில்களில் சீனாவின் முதலீடும் உற்பத்தியும் வேகமாக வளர்ந்து வருகிறது.    NEW TRIO எனப்படும் மின்சார வாகனங்கள், லித்தியம்-அயன் பேட்டரிகள் மற்றும் சோலார் பேனல்களின் உலகளாவிய ஏற்றுமதியில் சீனா முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், 5 சதவீத வளர்ச்சி இலக்கை அடையும் சீனாவின் நம்பிக்கைகள் வேக வேகமாக மங்கி வருகின்றன. கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டி வங்கி போன்ற உலகளாவிய முதலீட்டு வங்கிகள், சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று கூறியுள்ளனர்.

முன்னதாக,  இந்த ஆண்டு சீனா 4  சதவீத வளர்ச்சியைக் காணும் என்று சுவிஸ் வங்கி கணித்திருந்தாலும், சீனாவால் அந்த வளர்ச்சியை அடைய முடியாது என்பது தான் எதார்த்தம். மேலும், அடுத்த ஆண்டு சீனாவின்  பொருளாதாரம் வெறும் 3 சதவீதம் மட்டுமே வளரும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபரான ட்ரம்ப், சீனா மீது அதிகமாக வரிகளை விதித்தார். சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதிக்கப் பட்டிருக்கிறது.

இதன் காரணமாக, அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதி மூன்றில் இரண்டு பங்கு குறையும் என்று கணித்துள்ள சுவிஸ் வங்கி, அதே நேரத்தில், டாலர் அடிப்படையிலான மொத்த வெளிநாட்டு ஏற்றுமதிகள் 10 சதவீதம் குறையக்கூடும் என்று தெரிவித்துள்ளது.   வழக்கமாக அமெரிக்கா தும்மினால் மற்ற உலக நாடுகளுக்குச் சளி பிடிக்கும் என்று வேடிக்கையாகச் சொல்லப்படுவதுண்டு. இப்போது இது சீனாவுக்குப் பொருந்தும்.

சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால், அதன் தாக்கம் பிற நாடுகளுக்கும் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும்  சீனாவுடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்கள் கூட அந்நாடு எதிர்கொண்டு வரும் பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பின் எதிரொலியாகப் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க நேரும் என்று உலக வர்த்தக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement
Tags :
donald trump 2025FEATUREDMAINUS Tariff Reaction: Chinese Economy in Trouble? - Global Trade Stumblingusaஅமெரிக்க வரி விதிப்புசீன பொருளாதாரம்
Advertisement