அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகள் முடக்கம்!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
2002 முதல் 2006 வரை அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. தொடர்ந்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.
இதற்கு எதிராகவும் அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.