அமைச்சர் பங்கேற்ற சமத்துவ விழா : தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்காமல் காலம் தாழ்த்திய சம்பவம்!
ராமநாதபுரத்தில் அமைச்சர் பங்கேற்ற சமத்துவ விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்காமல் காலம் தாழ்த்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
Advertisement
அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் சமத்துவ விழா நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், முதல் மூன்று வரிசைகளில் தூய்மை பணியாளர்கள் அமர மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து கடைசி வரிசையில் தூய்மை பணியாளர்கள் அமர வைக்கப்பட்ட நிலையில், 2 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுக்கு உணவு வழங்காமல் விழா ஏற்பாட்டாளர்கள் அலைக்கழித்துள்ளனர்.
இதனால் வேதனை அடைந்த தூய்மை பணியாளர்கள், சமத்துவ விழா என்று தங்களை அழைத்து வந்து விழா ஏற்பாட்டாளர்கள் அவமானப்படுத்திவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.
இதேபோல் ராமநாதபுரத்தில் நடைபெற்ற மற்றொரு அரசு நிகழ்ச்சியிலும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். தனியார் மண்டபத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக திமுகவினரால் அழைத்து வரப்பட்ட பொதுமக்கள், 4 மணி நேரமாகக் காக்க வைக்கப்பட்டனர். மேலும், குடிநீர், மின்விசிறி உள்ளிட்ட வசதிகளின்றி அங்கு வந்த மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர்.