அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த தொகுதியில் அரசு மருத்துவர்கள் பற்றாக்குறை : பொதுமக்கள் வேதனை!
அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த தொகுதியான திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இன்றி சிரமப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Advertisement
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் ஒரு மருத்துவர், 2 செவிலியர்கள் மட்டுமே பணியில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவிற்கு அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்ட தனி கட்டடம் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை என வேதனை தெரிவித்தனர்.
திருப்பத்தூர் தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது அமைச்சராக உள்ள அமைச்சர் பெரியகருப்பன், சொந்த தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் அவலநிலையை கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டினர்.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதலமைச்சர், அரசு மருத்துவமனைக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.