அமைச்சர் பொன்முடிக்கு அஸ்வத்தாமன் கண்டனம்!
அமைச்சர் பொன்முடி தன்னுடைய இழிவான அரசியலை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அமைச்சர் பொன்முடி தன்னுடைய இழிவான அரசியலை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சில நாட்களுக்கு முன் சாத்தனூர் அணை திறப்பால் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு கிராமத்தில் அவர் பார்வையிட சென்றபோது, அணை திறப்பு பற்றி எவ்வித அறிவிப்பும் தங்களுக்கு இல்லை என்றும், எவ்வித உதவியும் மாநில அரசு, தங்களுக்கு செய்யவில்லை என்றும் கொதிப்பில் இருந்த மக்கள், பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த நிகழ்விற்கு தொடர்பே இல்லாத விஜயராணி என்பவர் மீது, பாஜகவில் இருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக பொய் வழக்கு போடபட்டது.
அந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் மூச்சைப் பிடித்து வாதம் செய்தது திமுக அரசு.
(அதே நீதிமன்றத்தில் விக்கிரவாண்டியில் பெண்குழந்தை மர்ம மரணத்திற்கு காரணமான செயின்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் கேட்டு வந்த வழக்கில் மேம்போக்காக வழக்கை எதிர்கொண்டு அவர்களுக்கு பெயில் வாங்கிகொடுத்ததும் இதே திமுக அரசு தான் ) இந்நிலையில், இன்று இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத ஏழுமலை என்ற நபரை அழைத்து அடைத்து விசாரிப்பதாக கூறி மிரட்டுகிறது தமிழக காவல்துறை. தெரியாமல் தான் கேக்கிறேன்.
நாட்டில் வேறு பிரச்சனையே இல்லையா ?! பொன்முடி சட்டையில் கொஞ்சம் சேறு பட்டது தான் நாட்டின் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையா ?! மாநில அரசும் காவல்துறையும் மக்களுக்கானதா ?! இல்லை திமிர் பிடித்த மந்திரிகளுக்கானதா ?!
இதே வேகத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை விசாரித்து இருந்தால் “யார் அந்த சார் ?” என கண்டுபிடித்து இருக்கலாமே?! இருவேல்பட்டு கிராமத்தோடு முடியவேண்டிய பிரச்சனையை தமிழகம் தழுவிய பிரச்சனையாக் மாற்ற விரும்புகிறாரா அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலின்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.