அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து!
அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன், கருங்குளம், கோழிபத்தி கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது தேர்தல் விதிகளை மீறி, திமுக கொடி கம்பங்களை நட்டு, தோரணங்கள் கட்டி பிரச்சாரம் செய்ததாக பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல், மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து அவர் ஈடுபட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போதும் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த இரு தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கவும், வழக்குகளை ரத்து செய்ய கோரியும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான ராஜ கண்ணப்பன் தரப்பு, ஒரு வழக்கில் ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை வழங்க முடியும் என்றும், மற்றொரு வழக்கில் அபராதம் மட்டுமே விதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மூன்று ஆண்டுகள் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் கீழமை நீதிமன்றம் அதனை கருத்தில் எடுத்திருக்க கூடாது என்றும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி, அமைச்சர் மீதான இரண்டு தேர்தல் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.