அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு - போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதம்!
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் நினைவு நாளையொட்டி சென்னையில் அமைதி பேரணி நடத்த அனுமதி மறுத்ததால் போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கோயம்பேட்டில் கட்சித் தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவிடத்தில் தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும், ஏராளமானோர் முடி காணிக்கையும் செலுத்தினர். இந்நிலையில், தேர்தல் ஆணைய அலுவலகம் அருகில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் வரை அமைதிப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தொண்டர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பேட்டியளித்த தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார்.