அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி மனு - பரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
அம்பேத்கர் நினைவு தினத்தில் அவரின் உருவச்சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி அளித்த மனு மீது காவல்துறை உரிய பரிசீலினை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கரின் 68வது நினைவு தினம், நாளை அனுசரிக்கப்படுவதையொட்டி சென்னையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதி வழங்க வேண்டுமென இந்து மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதில், கடந்த 2021-ஆம் ஆண்டு அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற இந்து மக்கள் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அனுமதி கோரி பலமுறை மனு அளித்தும் காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, நாளை சென்னை அம்பேத்கார் மணிமண்டத்திற்கு செல்லும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த யாருக்கும் அனுமதி மறுக்க கூடாது என தெரிவித்ததுடன் இந்து மக்கள் கட்சி அளித்த மனுவை பரிசீலிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.