அயோத்தி ஸ்ரீராமர் கோவில் செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு! - முழு விவரம்
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 22 -ம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீராமர் கோவிலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது.
Advertisement
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் மகா கும்பாபிஷே விழாவில் கலந்து கொள்ள வேண்டி, நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், ஆன்மீக அன்பர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோருக்கு, மகா கும்பாபிஷேக அழைப்பிதழ், ஸ்ரீராமர் படம் மற்றும் அட்சதை உள்ளிட்டவை ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், பாஜகவினர் மற்றும் முக்கிய நிர்வாகிகளால் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால், மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து, கோடிக்கணக்கான பொது மக்கள், பக்தர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், அயோத்தி மகா கும்பாபிஷேக நிகழ்வில் பங்கு கொள்ள வசதியாக, இந்திய ரயில்வே நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் இருந்து அயோத்தி செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழத்தின் முக்கிய நகரங்களான, கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடு, சேலம், மானாமதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து அயோத்திக்குச் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளன.
வரும் 29-ம் தேதி திங்கள்கிழமை முதல், பிப்ரவரி 29-ம் தேதி வரை அயோத்திக்குச் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளன என இந்திய ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், பயணம் தொடர்பாகக் கூடுதல் விவரம் பெற, இரயில்வே நோடல் அதிகாரி திரு. ரவிக்குமாரை 8287931901 என்ற செல் எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.