அரசுப்பணியில் சேர்ந்த ஊழியர் ஆவணங்களை 6 மாதங்களுக்குள் சரிபார்க்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்
அரசுப்பணியில் சேர்ந்தவர்களின் ஆவணங்களை 6 மாதங்களுக்குள் சரிபார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
மேற்கு வங்கத்தில் பாசுதேவ் தத்தா என்பவர் கடந்த 1985-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி அரசுப்பணியில் சேர்ந்த நிலையில், 2010-ம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு அவர் இந்திய குடிமகன் அல்ல என கண்டுபிடிக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பணிநீக்கத்தை எதிர்த்து மேற்கு வங்க நிர்வாக தீர்ப்பாயம், கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் பாசுதேவ் தத்தா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாசுதேவ் தத்தாவின் பணிநீக்கத்தை ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. அத்துடன் ஒருவர் அரசுப்பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் அவரது பின்னணியை சரிபார்க்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசுப்பணியில் சேர்ந்த அந்த நபரின் பின்னணியை சரிபார்த்த பிறகுதான் அவரது பணியை வரன்முறை செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.