செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அரசு மருத்துவமனைகளில் அதிக காலிப்பணியிடங்கள் ; அவசர பிரிவில் சுகாதாரத்துறை - சிறப்பு கட்டுரை!

08:00 AM Dec 19, 2024 IST | Murugesan M

தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் இருப்பது சி.ஏ.ஜி எனப்படும் கணக்கு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

2022ஆம் ஆண்டின் நிலவரப்படி தமிழகத்தின் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கிவரும் பல்வேறு இயக்குனரகங்களில் மொத்தமாக 29 ஆயிரத்து 27 காலிப்பணியிடங்கள் அதாவது 28 சதவிகிதம் காலிப்பணியிடங்கள் நிலவிவருவது தெரியவந்துள்ளது.

குடும்ப நல இயக்ககத்தின் கீழ் இயங்கிவரும் குடும்ப நல உதவியாளர், குடும்ப நல விரிவாக்க கல்வியாளர், மகப்பேறு குழந்தை நல அலுவலர் பணியிடங்கள் 100 சதவிகிதம் காலிப்பணியிடங்களாகவே இருந்துள்ளன.

Advertisement

அதே போல ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் 12 ஆயிரத்து 791 காலிப்பணியிடங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 43 சதவிகிதமாக இருக்கிறது. மேலும் 10 ஆயிரத்து 759 துணை மருத்துவர் பணியிடங்களில் 3 ஆயிரத்து 621 பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன.

அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ICU பிரிவில் உள்ள ஒவ்வொரு படுக்கைகளுக்கும் தலா ஒரு செவிலியர் இருக்க வேண்டும் என்ற இந்திய செவிலியர் மன்ற விதிமுறைகளுக்கு மாறாக தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் 60 முதல் 88 சதவிகிதம் வரை செவிலியர் பற்றாக்குறை இருப்பதை சி.ஏ.ஜி அறிக்கை உறுதி செய்துள்ளது.

அதிலும் செய்யாறு, ஈரோடு, கும்பகோணம் அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைவான செவிலியர்களே ICU பிரிவில் பணியாற்றி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
மருந்தாளுநர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அரசு, அதன் பின் முறையான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனவும், மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த தனி வாரியம் அமைக்கப்பட்டிருந்தாலும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பின் தங்கியே இருந்ததாகவும் சிஏஜி அறிக்கையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவசர கால ஊர்தியான 108 ஆம்புலன்ஸ் சேவையில் போதிய ஜிபிஎஸ் வசதி இல்லாத காரணத்தினால் இலக்கான 20 நிமிடங்களை 46 சதவிகித அழைப்புகள் சென்றடையவில்லை என்ற தகவலையும் சி.ஏ.ஜி அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும் தமிழக அரசால் பல்வேறு வகைகளில் திரட்டப்பட்ட நிதியான ஆயிரத்து 787 கோடி ரூபாயில் 264 கோடி ரூபாய் மீதமிருப்பதும் தெரியவந்துள்ளது.

கொரானா தொற்று காலத்தில் ராஃபா எனும் நிறுவனம் பத்துலட்சம் N-95 முகக்கவசங்களை வழங்க முன்வந்திருந்த போதிலும், அந்த நிறுவனத்திடமிருந்து ஐந்து லட்சம் மட்டுமே வாங்கப்பட்டதாகவும், அதன் விளைவாக மற்ற நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து N-95 முகக்கவசங்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதும் சிஏஜி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisement
Advertisement
Next Article