சென்னையில் அரசு மருத்துவர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு - தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டம்!
அரசு மருத்துவமனைகளில் 20 ஆயிரம் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக அரசை கண்டித்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பல்வேறு கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மருத்துவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பேசிய அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடுக்கு மேல் அதிகரித்துள்ளதால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்தார். தமிழகத்தில் 80 ஆயிரம் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில், 30 ஆயிரம் மருத்துவர்கள் கூட பணியில் இல்லை எனவும் அவர் கூறினார்.
இதேபோல் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு முதுநிலை மருத்துவர் சங்கம் மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் ஆகியவற்றின் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல் செயல்பட்ட நிலையில், புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் பணி செய்யாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தஞ்சை, திருவாரூர், அரியலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நோயாளிகள் ஏமாற்றம் அடைந்தனர். புறநகர் பிரிவில் நோயாளிகளுக்கு பதிவு சீட்டு வழங்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் ச்கிச்சை பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தங்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புற நோயாளிகள் பிரிவிற்கு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆனால், அறுவை சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை வழக்கம்போல் இயங்கின.
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு செயல்படாமல் முடங்கியதால், சிகிச்சை பெற வந்தவர்கள் அவதியடைந்தனர். இதனிடையே, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்ளிட்டோர் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.