அரசு மருத்துவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!
அரசு மருத்துவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் துறை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விவகாரங்கள்
இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், மருத்துவ சங்க பிரதிநிதிகள் எடுத்துரைத்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் அறிவித்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி இளைஞர் விக்னேஷ் தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தார்.
மேலும், விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என குறிப்பிட்ட அமைச்சர், அவரது தாய்க்கு சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அவருக்கு அரசு மருத்துவமனையில் கட்டாயம் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்தார்.