அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள் : மகாராஷ்டிராவில் வெற்றி பெறப்போவது யார்? - சிறப்பு கட்டுரை!
மகாராஷ்டிராவில் எப்படியும் ஆட்சி அமைத்து விட வேண்டும் என மகா விகாஸ் அகாதி கூட்டணியும், ஆட்சியைத் தக்க வைத்து கொள்ள வேண்டும் என மகாயுதி கூட்டணியும் போராடி வருகின்றன. இந்த இரண்டு கூட்டணிகள் சார்பிலும், மக்களை கவரும் வகையில், பல்வேறு இலவசங்கள் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் வணிக மையமாக கருதப்படும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ் கட்சியின் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜக, தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, ஆகிய கட்சிகள் இடம்பெற்று உள்ளன.
மகாயுதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில், தேர்தல் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளன. அவற்றில், மக்களை கவரும் வகையில், குறிப்பாக இளைஞர்கள் , பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கென்று பல்வேறு இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
‘தொலைநோக்கு ஆவணம்’ என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில், மிஷன் ஒலிம்பிக் 36, விவசாயிகளுக்கான ஆதரவு, லட்தி பெஹ்னா யோஜனா, சுகாதாரம் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் உள்ளன. மகாராஷ்டிர மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகா விகாஸ் அகாடி சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், விவசாய செழிப்பு,குடும்ப பாதுகாப்பு,இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் கொடுக்கப் பட்டுள்ளன.
ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக சம்பாதிக்கும் பெண்களுக்கும், 21வயதில் இருந்து 65 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் மாதம் 1,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை ஆளும் பாஜக செயல்படுத்தி வருகிறது.
இப்போது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதே திட்டத்தில் மாதத்துக்கு 2,100 ரூபாய் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் போட்டியாக காங்கிரஸ் கட்சி மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் 25,000 பெண்கள் வேலை வழங்கப்படும் என்று பாஜக கூறியிருக்கிறது. இதற்கு போட்டியாக காங்கிரஸ் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் சலுகையை அறிவித்துள்ளது.
10 லட்சம் மாணவர்களுக்கு மாதந்தோறும் 10,000 ரூபாய் வழங்கப் படும் என்றும், மேலும் 25 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும் என்றும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. இதற்குப் போட்டியாக காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் 4,000 ரூபாய் வழங்குப் போவதாக கூறியுள்ளது.
விவசாய மின் கட்டணத்தில் 30 சதவீதம் குறைக்கப்படுவதாகவும், விவசாயிகளுக்கான ஆண்டு நலநிதி 15000 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. இதற்கு போட்டியாக, அனைத்து விவசாயிகளுக்கும் 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாகவும், விவசாயிகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் வரை மின் கட்டணம் தள்ளுபடி செய்வதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.
பாஜக கொண்டு வந்த அடல் சேது, சம்ருத்தி மகாமார்க், நவி மும்பை விமான நிலையம், மும்பை பெருநகரப் பகுதியின் மெட்ரோ நெட்வொர்க், வாதவன் துறைமுகம் மற்றும் தாராவி மறுசீரமைப்பு திட்டம் போன்ற முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன என்பது பாஜகவுக்கு சாதகமாக உள்ளன.
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், உயர்சாதியினர் மற்றும் இந்துகள் ஆதரவுடன் பாஜக தேர்தல் களத்தில் இருக்கிறது. இதற்கு போட்டியாக, பாரம்பரிய மராட்டியர், இஸ்லாமியர் மற்றும் மகர் சமூகத்தினர் வாக்குகளை நம்பி காங்கிரஸ் கூட்டணி உள்ளது.
84 வயதான சரத் பவாருக்கு கடைசி தேர்தல் என்பதால், இந்த தேர்தல் அவருக்கு ஒரு கௌரவப் போர் ஆக உள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தன் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.
மேலும் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணைமுதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோருக்கும் இந்த தேர்தல் முக்கியமான தேர்தலாகும். ஏனென்றால்,மாநிலத்தில் யார் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதையும் இந்த தேர்தல் தீர்மானிக்கப் போகிறது
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 165 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள மகா விகாஸ் அகாதி கூட்டணி 106 முதல் 120 தொகுதிகளில் வெல்லலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.