ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்! : பிரதமர் மோடி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், அரசியலமைப்பின் 75-வது ஆண்டை கொண்டாடி வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, 2024-ம் ஆண்டின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் இது தமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றார்.
வக்பு வாரியம், பேரிடர் மேலாண்மை, ரயில்வே மசோதா உள்ளிட்ட மசோதாக்களை இந்த குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும், நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்ப்பதாகவும், ஆனால், நாடாளுமன்றத்தை முடக்க சிலர் முயற்சித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சியினர் தங்கள் ஆதரவாளர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து முயன்று வருவதாகவும்,
அவர்களின் செயல்களை கணக்கு வைத்துள்ள நாட்டு மக்கள், தக்க சமயத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்குவார்கள் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிகார பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ள நிலையில், அவர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகிறார்கள் எனவும்,
அவர்களின் அமளியால் இளம் எம்.பி-க்களின் செயல்பாடுகள் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.