ஆக்கிரமிப்பு அகற்றமா? விதிமீறலா? அகதிகளான அவலம், கதறி துடிக்கும் மக்கள் - சிறப்பு தொகுப்பு!
ஆக்கிரமிப்பு எனும் பெயரில் திருவேற்காடு பகுதியில் மூன்று தலைமுறைகளாக வசித்தும் வரும் பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக தமிழக அரசு மீது புகார் எழுந்துள்ளது. முன்னறிவிப்பின்றி 25க்கும் அதிகமான வீடுகள் இடிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசு நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இது தொடர்பான செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட இடம் தான் இந்த கோலடி பகுதி. செல்லியம்மன் நகர், அன்பு நகர் மற்றும் முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர். இந்த சூழலில் கோலடி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக அனைத்து குடியிருப்புகளிலும் நீர்வளத்துறையின் மூலம் கடந்த 15ம் தேதி ஒட்டப்பட்ட நோட்டீஸ் பொதுமக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நோட்டீஸை தொடர்ந்து எந்தவித முன்னறிவிப்புமின்றி 25க்கும் அதிகமான வீடுகள் ஜேபிசி இயந்திரங்களின் மூலம் இடிக்கப்பட்டதால், தன்னுடைய வீட்டையும் இடித்துவிடுவார்கள் என மன உளைச்சலுக்குள்ளான தச்சுத் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.
தச்சுத்தொழிலாளியின் மரணத்திற்கு நீதி கேட்டும், ஆக்கிரமிப்பு எனும் பெயரில் வீடுகளை இடிக்கும் பணிகளை நிறுத்தக்கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத காலத்தில் குடியேறிய தங்களுக்கு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை வழங்கியதோடு, பல்வேறு விதமான வரிகளையும், கட்டணங்களையும் வசூலித்துக் கொண்டிருக்கும் அரசு நிர்வாகம் தங்களை வெளியேற்றத் துடிப்பது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர்.
சொந்த வீடு எனும் கனவில் பல ஆண்டுகளாக உழைத்து பணம் சேர்த்து பார்த்து பார்த்து கட்டிய வீடு தங்களின் கண்முன்னே இடிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என அப்பகுதி மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வேறு ஏதாவது வணிக கட்டடங்களை கட்ட அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகத்தையும் குடியிருப்புவாசிகள் எழுப்பியுள்ளனர்
எனவே, திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் பன்னெடுங்காலமாக வசித்துவரும் தங்களை ஆக்கிரமிப்பு எனும் பெயரில் அகதிகளாக்கும் தமிழக அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.