ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது அதிர்ச்சி : 400 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கண்டுபிடிப்பு - சிறப்பு கட்டுரை!
உத்தரப்பிரதேசத்தில், சம்பலில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில், 46 ஆண்டுகள் கழித்து, 400 ஆண்டுகள் பழமையான, பாழடைந்த சிவன் கோயில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இடிபாடுகளின் கீழ், மறைத்து வைக்கப் பட்டிருந்த இந்து கோயிலில், பூமிக்கடியில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு சிவலிங்கம், நந்தி, மற்றும் அனுமனின் மூர்த்திகள் கிடைத்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உத்தரப்பிரதேசத்தில் சம்பலில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில், மின்சார திருட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த காலங்களில் ஆய்வுகள் நடத்த இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர்.
மின்சாரத் துறையைச் சேர்ந்த குழுக்கள்,காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளை, இந்தப் பகுதிகளில் மின்திருட்டு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள முயன்றபோது மீண்டும் இஸ்லாமியர்கள் தாக்குதல்கள் நடத்தினர்.
மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர மின் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, எதிர்பாராத கண்டுபிடிப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொஹல்லா தீபா சராய் நகாசா காவல் நிலையப் பகுதிக்கு அருகில் உள்ள கக்குசாரை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, கோயிலைப் போன்ற பூட்டிய ஒரு பழமையான கட்டிடத்தை அதிகாரிகள் கண்டனர். பல ஆண்டுகள் பழமையான பூட்டைத் திறந்து பார்த்த போது அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பழமையான கட்டிடத்தின் உள்ளே ஒரு பாழடைந்த சிவன் கோயில் சிதிலமடைந்து இருந்தது.
46 ஆண்டுகளாக இந்தக் கோயில் பூட்டப்பட்டிருந்ததாக கூறிய, உள்ளுர் மக்கள் பெரும்பான்மை இஸ்லாமியர்களின் அச்சுறுத்தல் காரணமாக, கோயிலில் இந்துக்கள் தரிசனம் செய்ய முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளுக்குக் கீழ் புதையுண்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோயிலில், ஒரு சிவலிங்கம்,நந்தி மற்றும் அனுமன் ஆகியவை கண்டெடுக்கப் பட்டுள்ளன. மேலும், கோயிலின் உள்ளே அரை நூற்றாண்டுக்கும் முன்பு வழங்கப்பட்ட நாணயங்களும் சிதறி கிடந்துள்ளன.
1978ம் ஆண்டு, இவ்வூரில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரம் வன்முறையில் முடிந்தது. இந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. இந்துக்களின் வணிக இடங்கள், கோயில்கள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்துக்களின் நிலங்கள் இஸ்லாமியர்களால் பறிக்கப் பட்டன. மேலும், இப்பகுதியில் இஸ்லாமியர்கள் ஆதிக்கம் அதிகமானது. இந்துக்கள் கோயிலுக்குச் சென்று வழிபட பயந்தனர். ஒரு காலத்தில் பஜனைகள், பூஜைகள் நாளும் நடந்த கோயில், இழுத்து பூட்டப்பட்டது. காலபோக்கில் இந்தக் கோயிலே மறக்கப்பட்டது.
இப்போது,கோயிலைச் சுற்றியுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. கோயிலை அதன் அசல் வடிவத்துடன் மீட்டெடுக்கவும், மறு சீரமைப்பு செய்யவும், கோயில் கிணற்றைப் புதுப்பிக்கவும்,அரசு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இதற்கிடையே, பழமையான கோவில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள், கோவில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள தங்கள் வீடுகளைத் தாங்களே இடிக்கத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, ஷாஹி ஜமா மசூதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பிறகு, சம்பலில் பதற்றம் அதிகரித்த நிலையில், பழைய இந்து கோயில் புதையுண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் நியாயமான சட்ட போராட்டம் மற்றும் அமைதியான போராட்டங்கள் மூலம் நாட்டின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தையும் மீட்டெடுப்பதற்கான உறுதியான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.