செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆங்கில புத்தாண்டு - கோயில்களில் சிறப்பு வழிபாடு!

02:49 PM Jan 01, 2025 IST | Murugesan M

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Advertisement

கரூர் அண்ணா சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் மூலவர் கணபதிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, பரிவார தெய்வமான கன்னிமூல கணபதி, ஐயப்பன், பாலமுருகன், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் மற்றும் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, மூலவர் கணபதிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

திருச்சியில் புகழ் பெற்ற வெக்காளியம்மன் கோயில், உக்கிர காளியம்மன் கோவில், வழிவிடும் முருகன் கோவில், ஐயப்பன் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற குறிஞ்சி ஆண்டவர் திருக்கோயிலில், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனை உள்ளிட்டவையும் நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை பக்தர்கள் வணங்கி மகிழ்ந்தனர்.

வரும் தை மாதம் பழனிமலைக்கு செல்லும் பக்தர்கள், கோயிலில் மாலை போட்டு தங்களது விரதத்தை தொடங்கினர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரசித்தி பெற்ற குடவரை கோயிலான முருகன் கோயிலில் பக்தர்கள், புத்தாடை உடுத்தி குடும்பத்துடன் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது, இந்த ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் எனவும், நினைத்த காரியங்கள் கைகூட வேண்டும் என்றும் பிரார்த்தனை மேற்கொண்டனர். மேலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.

புதுச்சேரியில் புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் உள்ளூர் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. உட்பிரகாரத்தில், மூலவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரங்கநாதர் கோயிலில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், உற்சவர் அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

புத்தாண்டையொட்டி தூத்துக்குடியில் உள்ள ராமேஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் பெருமான் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுவாமி மற்றும் அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த நிலையில், புத்தாண்டையொட்டி பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது.

புத்தாண்டை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை நள்ளிரவு 1 மணிக்கு  நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றபோது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து செந்தில் ஆண்டவரை பொதுமக்கள் தரிசித்து வருகின்றனர்.

Advertisement
Tags :
Ayyappan templeFEATUREDHappy New YearMAINMurugan Temple Valliyurnew year wish. new year 2025Sri Karpaka Vinayagar Temple karurUkra Kaliamman TempleVaavidu Murugan TempleVekkaliamman Templeஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
Advertisement
Next Article