ஆங்கில புத்தாண்டு - பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
ஆங்கில புத்தாண்டையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 9 மணியிலிருந்து காவல் துறை அதிகாரிகள், ஊர்க்காவல் படையினர் மூலம் கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பிரதான சாலைகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது, அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க சோதனை குழுக்களை அமைத்து விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடுவதற்கு காவல் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப் படைகள் மற்றும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும்,
ஆங்காங்கே உதவி மைய கூடாரங்கள் அமைத்து ட்ரோன் மூலம் கண்காணிக்கவும் போலீஸாருக்கு காவல் துறை தலைமை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.