தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து ஓட்டுநராக அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த கனிமொழி. மகளிரை போற்றி கொண்டாடும் இந்த மகளிர் தினத்தில் சாதனைப் பெண்மணி கனிமொழி குறித்து அனுபவங்களை இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் இந்த அழகன் பேருந்து சுற்றுவட்டார மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த பிரபலத்திற்கு முதன்மைக் காரணமாக இருப்பது அப்பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர் கனிமொழி… உடுமலைப் பேட்டை பூலாங்கிணறு பகுதியைச் சேர்ந்த கனிமொழி எம் எட் பட்டப்படிப்பு படித்திருந்தாலும், தனது கணவரின் கனவுத் தொழிலான டிராவல்ஸ் தொழிலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
ஆண்களால் மட்டுமே இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை பெண்களாலும் இயக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழும் கனிமொழி, தன்னை நம்பி பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் பாதுகாப்பான பயணத்தை தர வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.
ஆரம்பத்தில் சில சவால்களை சந்தித்தாலும், அந்த தடைகளை தகர்த்தெறிந்து வெற்றி பெற முடியும் என்ற உறுதியோடு இருக்கும் கனிமொழி ஆம்னி பேருந்துகளை சர்வ சாதாரணமாக இயக்கி வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான கனிமொழி, நாள்தோறும் சென்னை அளவிலான நெடுந்தூரத்திற்கு பேருந்தை பாதுகாப்பாக இயக்கி சாதனைப் பெண்மணியாக வலம் வருகிறார்.
டிராவல்ஸ் தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவை நினைவாக்கியதோடு, அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு மனைவி உறுதுணையாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கிறார் கனிமொழியின் கணவர் கதிர்வேல்…
சவால்களையும், தடைகளையும் தகர்த்தெறிந்து பயணித்தால் நம் லட்சிய இலக்கை நிச்சயம் அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக திகழும் கனிமொழி, தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண்களின் வெற்றிக்கும் முன்னோடியாகவும் திகழ்கிறார்.