ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு - நாளை முதல் சாட்சி விசாரணை!
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் நாளை முதல் சாட்சி விசாரணை நடைபெறவுள்ளது.
தமிழக பாஜக பொதுச்செயலாளராக இருந்த சேலத்தைச் சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013-ம் ஆண்டு படுகொலை செய்யப்பாட்டார். இதில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் சேலம் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு ஆடிட்டர் ரமேஷின் தாயார் தொடர்ந்த வழக்கில், வழக்கு விசாரணையை 2 மாதத்திற்குள் முடிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டதால் வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்டது.
கடந்த 2024-ம் ஆண்டு இந்த வழக்கு பயங்கரவாத தடுப்பு அமைப்புக்கு மாற்றப்பட்ட நிலையில், சாட்சி விசாரணை நடைபெற்று வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் நியமிக்காமல் இருந்ததால் சாட்சி விசாரணை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் நாளை முதல் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.