ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப் : உச்ச பொறுப்புகளில் இந்துக்கள் நியமனம் - சிறப்பு கட்டுரை!
அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் ட்ரம்பின் வெள்ளை மாளிகை தேர்வுகளில் இந்திய வம்சாவளியினர் இடம் பெற்றுள்ளனர். அரசியல் மற்றும் நிர்வாக திறமைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியினர் ஆழமான இந்து மத நம்பிக்கை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வரும் ஜனவரி 20ம் தேதி, அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கிறார். அதன் பிறகு அவர் அதிகாரப்பூர்வமாக அதிபருக்கான அதிகாரங்களைப் பெற முடியும். அதற்கு முன்னதாக, வெள்ளை மாளிகையின் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 4000 அரசு நியமனங்களை செய்து வருகிறார்.
வெள்ளை மாளிகை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், இந்திய வம்சாவளியினரை மிக முக்கிய பொறுப்புக்களில் ட்ரம்ப் நியமித்திருக்கிறார்.
குறிப்பாக, அரசாங்கத்தின் திறன் சார்ந்த துறை (Department of Government Efficiency - DOGE) என்ற புதிய துறையை உருவாக்கியுள்ள அதிபர் ட்ரம்ப், அதன் தலைமை பதவியில் எலான் மஸ்க் உடன் விவேக் ராமசாமியையும் நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், விவேக் ராமசாமியை ‘தேசப்பற்று கொண்ட அமெரிக்கர்’ என்று அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவில் பிறந்த விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்கஞ்சேரியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
வடக்கஞ்சேரியில் பிறந்து வளர்ந்த ராமசாமிக்கும் பொள்ளாச்சியில் பிறந்த விவேக்கின் தாயார் கீதாவுக்கும் பழனியில்தான் திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்துக்கு முன்பே மனநோய் மருத்துவரான விவேக்கின் தாயார் கீதா அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்திருக்கிறார். தாய் மொழி தமிழ் என்பதால், இன்றும் விவேக் ராமசாமி தமிழில் நன்றாக பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் பயின்றாலும் தான் ஒரு இந்து என்பதில் பெருமை கொள்வதாக கூறியிருக்கும் விவேக் ராமசாமி, மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டையும், விடாமல் கடைபிடிப்பதாக பல தருணங்களில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
அடுத்ததாக, தேசிய புலனாய்வு இயக்குநராக முன்னாள் ஜனநாயகக் கட்சியின் துளசி கபார்டை அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார். இதன் மூலம், துளசி கப்பார்ட், அமெரிக்க உளவு அமைப்புகளில் தலைவராகவும், அமெரிக்க அதிபரின் உளவுத்துறை ஆலோசகராகவும் செயல்படும் முதல் இந்து பெண்மணி ஆவார்.
70 பில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டை நிர்வகிப்பார் என்றும், சிஐஏ, எஃப்பிஐ மற்றும் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி (என்எஸ்ஏ) போன்ற அமெரிக்காவின் 18 உளவுத்துறை நிறுவனங்களை துளசி கபார்ட் தலைமையேற்று வழி நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் நேரடித் தொடர்புகள் இல்லை என்றாலும், துளசி கபார்ட்டின் தாயார், இந்து மதத்துக்கு மாறியவர் . ரோமன் கத்தோலிக்கரான துளசி கபார்ட் டின் தந்தை மைக் கபார்ட் மற்றும் தாயார் கரோல் கபார்ட் தங்கள் குழந்தைகளை இந்து மத நம்பிக்கைகளுடன் வளர்த்தனர், மேலும் தங்களின் ஐந்து குழந்தைகளுக்கும் இந்துமத பெயர்களையே வைத்தனர். தனது குழந்தைகளுக்கு இந்து பெயர்களையே துளசி கபார்ட் வைத்திருக்கிறார்.
அமெரிக்க சமோவான் வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்ட் எப்போதும் தன்னை ஒரு இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்வதிலேயே பெருமை படுகிறார். தனது 21 வது வயதில், அமெரிக்க காங்கிரஸின் முதல் இந்து உறுப்பினராக வரலாறு படைத்த துளசி கபார்ட், ஸ்ரீமத் பகவத் கீதையின் மீது கை வைத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
கிருஷ்ண பக்தியை வளர்க்கும் இஸ்கானின் ஹரே கிருஷ்ணா மகாமந்திரத்தை துளசி கபார்ட் பாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. 2015ம் ஆண்டு பாரம்பரிய வேத முறைப்படி, திரைப்பட தயாரிப்பாளர் ஆபிரகாம் வில்லியம்ஸை துளசி கபார்ட் திருமணம் செய்து கொண்டார்.
இந்தியா-அமெரிக்க உறவுகளின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள துளசி கபார்ட் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக பிரதமர் மோடியுடனான ட்ரம்பின் வலுவான தனிப்பட்ட உறவை சுட்டிக்காட்டியுள்ளார். ட்ரம்ப் பதவியேற்றவுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருநாட்டு உறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த வரிசையில், அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவின் தலைவராக இந்திய வம்சாவளியினரான காஷ் படேல் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிஐஏ அமைப்பின் தலைவராக ஜான் ராட்க்ளிஃப் என்பவரை ட்ரம்ப் நியமித்திருக்கிறார். தற்போது காஷ் படேலை எஃப்பிஐ-யின் இயக்குநராக்கி இருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.
ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த, குஜராத்தைப் பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்தவர்தான் காஷ் படேல். நியூயார்க்கில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக தன் வாழ்க்கையை தொடங்கி, நீதித்துறையில் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.
ஏற்கெனவே, காஷ் படேல், ட்ரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில், தேசிய உளவுத்துறை இயக்குநர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகிய இருவருக்கும் ஆலோசகராக பணிபுரிந்திருக்கிறார்.
இந்தியாவில் ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோயிலை மீட்டெடுப்பதற்கு ஆதரவாக குரல் கொடுத்த காஷ் படேல், ஸ்ரீ இராமரின் வரலாறு மற்றும் ஸ்ரீ இராம ஜென்ம பூமியின் வரலாற்று முக்கியத்துவத்தை புறக்கணித்த மேற்கத்திய ஊடகங்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.
1500 ஆண்டுகளுக்கு முன் இருந்த பழமையான இந்துக் கோயிலைத் திரும்ப பெறுவதற்காக , கடந்த 500 ஆண்டுகளாக போராடி வந்த வரலாற்றை அமெரிக்க ஊடகங்கள் வசதியாக மறந்து விட்டன என்றும் காஷ் படேல் தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஜெய் பட்டாச்சார்யாவை அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குநராக அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.
இதற்கெல்லாம் மேலாக, இந்திய வம்சாவளி இந்துவான உஷா வான்ஸின் கணவர் ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகி இருக்கிறார். இதன்மூலம், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாகும் முதல் இந்தியர் என்ற பெருமையை உஷா வான்ஸ் பெற்றிருக்கிறார்.
இதுவரை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமோசா காகஸ் இருந்தது. ட்ரம்ப் 2.0 வில், வெள்ளை மாளிகை உயர் பொறுப்புக்களில் இந்திய வம்சாவளியினர் இடம் பெற்றிருப்பது உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.