ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெட்சருக்கு அடியில் சிக்கிய கல்லூரி மாணவர் : 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு!
மயிலாடுதுறையில் ஆம்புலன்ஸின் ஸ்ட்ரெட்சருக்கு அடியில் தலை சிக்கிய கல்லூரி மாணவர் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.
Advertisement
எலந்தகுடியைச் சேர்ந்த முகமது சாஜித், முகமது ரியாம் ஆகிய கல்லூரி மாணவர்கள் இருவர் மதுபோதையில் ஊர் திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், காயமடைந்த மாணவர்கள் இருவரும் மீட்கப்பட்ட நிலையில், தனியார் சமூக நல அறக்கட்டளையின் இலவச ஆம்புலன்ஸ் மூலமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் உள்ளே வளைவில் திரும்பியபோது முகமது ரியாமின் தலை ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெட்சரில் சிக்கியுள்ளது. அப்போது அவரது கதறலை கேட்டு வந்த மருத்துவமனை ஊழியர்கள், முகமது ரியாமை மீட்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர், ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெட்சரை வெட்டி எடுத்து முகமது ரியாமை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.