For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆய்வறிக்கையில் அதிர்ச்சி : இந்தியாவை சுரண்டி கொழுத்த பிரிட்டன்!

08:30 PM Jan 23, 2025 IST | Murugesan M
ஆய்வறிக்கையில் அதிர்ச்சி   இந்தியாவை சுரண்டி கொழுத்த பிரிட்டன்

அழியாத பெரும்செல்வம் நிறைந்த நாடு என்பதால், ஒரு காலத்தில் தங்கப் பறவை' என்று அழைக்கப்பட்ட இந்தியா, ஆங்கிலேயர்களால் 200 ஆண்டுகளாக சூறையாடப்பட்டது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காலனி ஆதிக்க ஆட்சியின் போது, கொள்ளையடித்த மொத்த செல்வத்தில் 52 சதவீதத்துக்கும் அதிகமான செல்வம், இங்கிலாந்தின் 10 சதவீத பணக்காரர்களின் கைகளுக்கு சென்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆக்ஸ்பாம் நிறுவனம், உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் முதல் நாளில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆய்வறிக்கையை வெளியிடுகிறது.

Advertisement

இந்த ஆண்டு, உலகளாவிய சமத்துவமின்மை பற்றிய தனது ஆண்டு அறிக்கையை Takers, not Makers, என்ற தலைப்பில், கடந்த திங்கள் கிழமை வெளியிட்டுள்ளது.

நவீன பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம், காலனித்துவத்தின் மறு உருவாக்கம் என்று குறிப்பிட்டிருக்கும் இந்த ஆய்வறிக்கை, அதற்கான பல எடுத்துக்காட்டுக்களை மேற்கோள் காட்டியுள்ளது.

Advertisement

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக, பிரிட்டிஷ் பேரரசின் ஆட்சியின் கீழ் இந்தியா அடிமை பட்டு கிடந்தது.

1765 மற்றும் 1900க்கு இடையிலான கால கட்டத்தில் மட்டும், நாட்டின் மொத்த செல்வத்தில் பாதிக்கும் மேல் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

அதாவது, இந்தியாவில் இருந்து 64.82 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை ஆங்கிலேய அரசு எடுத்துக்கொண்டது.

கொள்ளையடித்த மொத்த செல்வத்தில் 52 சதவீதத்துக்கும் அதிகமான செல்வம் இங்கிலாந்தின் 10 சதவீத பணக்காரர்களின் கைகளுக்குச் சென்றது.

இது, 50 பிரிட்டிஷ் பவுண்ட் நோட்டுகளால் லண்டனின் பரப்பளவில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு கம்பளம் விரிப்பதற்குப் போதுமான பணம் ஆகும்.

பிரிட்டனில் இன்றுள்ள கணிசமான பணக்காரர்களின் குடும்பச் செல்வத்தை அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்துடன் தொடர்புபடுத்த முடியும் என்றும், குறிப்பாக, அது, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டபோது பணக்கார அடிமைகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையாகும் என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், சுமார் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் இறந்ததாக சுட்டிக் காட்டியுள்ள இந்த ஆய்வறிக்கை, இரண்டாம் உலகப் போரின் போது தானிய இறக்குமதி கட்டுப்பாடுகள், இனவெறியின் அடிப்படையில் நடந்தாக தெரிவித்துள்ளது.

இதனால், 1943ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தால், சுமார் மூன்று கோடி இந்தியர்கள் பட்டினியால் உயிரிழந்தனர்.

காலனித்துவ காலத்தில் ஏற்பட்ட உணவு பற்றாகுறையின் விளைவாகவே, இந்தியர்களுக்கு அதிக உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்று ஆக்ஸ்பாம் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

1750ஆம் ஆண்டில், உலக தொழில்துறை உற்பத்தியில் 25 சதவீதத்தை இந்தியா வைத்திருந்தது என்றும் அதுவே 1900 ஆம் ஆண்டில், வெறும் 2 சதவீதமாகக் குறைந்தது என்றும் கூறியுள்ள ஆக்ஸ்பாம் அறிக்கை இந்திய ஜவுளிகளுக்கு எதிராக பிரிட்டன் கடுமையான பாதுகாப்புக் கொள்கைகளை அமல்படுத்தியதே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய உலகளாவிய தெற்கில் உள்ள பல நாடுகளில் பணக்காரர்களிடையே செல்வமும் அரசியல் அதிகாரமும் தொடர்ந்து குவிந்தன. ஜாதி, மதம், பாலினம், மொழி மற்றும் புவியியல் உட்பட, வரலாற்று காலனித்துவ காலத்தில் இந்த ஏற்ற தாழ்வுகள் விரிவுபடுத்தப்பட்டு, சுரண்டல்கள் தொடர்ந்தன.

குறிப்பாக, பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில்,இந்தியாவில் சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மூலம் சாதி அமைப்பு முறைப்படுத்தப்பட்டதாகவும், நாட்டின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலனித்துவத்தின் தொடர்ச்சியாக , இன்றும் உலகளாவிய வடக்கு, உலகளாவிய தெற்கை ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று உலகளாவிய சமத்துவமின்மை என்ற அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

உலகளாவிய தெற்கின் நலன்களைப் பாதுகாக்க தவறிய உலக வர்த்தக அமைப்பு (WTO) உலகளாவிய வடக்கில் உள்ள நாடுகளுக்கும், பெருநிறுவனங்களுக்குமே சாதகமாக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.

உலக வங்கி மற்றும் பல ஐரோப்பிய மேம்பாட்டு நிதி நிறுவனங்கள், உலகளாவிய வடக்கில் தனியார் மூலதனம் மற்றும் முதலீட்டு நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கில் உள்ள தொழிலாளர்களை, குறிப்பாக பெண் தொழிலாளர்களை உலகளாவிய வடக்கு நாடுகள், பணக்கார முதலாளிகளின் சார்பாக தொடர்ந்து சுரண்டுகின்றன என்று ஆக்ஸ்பாம் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

காலனித்துவ காலத்தில் தொடங்கிய புதைபடிவ எரிபொருட்களின் மிகப்பெரிய சுரண்டல் இன்றும் தொடர்கிறது, இது உலகை காலநிலை சீர்குலைவின் விளிம்புக்குக் கொண்டுச் சென்றுள்ளது என்று ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இந்தியாவுக்கு வந்திருந்த பிரபல பாடகர் Coldplay’s Chris Martin நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.

தனது நிகழ்ச்சிக்கு அதிக அளவில் வந்திருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மார்ட்டின், கிரேட் பிரிட்டன் செய்த அனைத்து மோசமான செயல்களையும் மன்னித்து, தங்கள் வீட்டுக்கு வரவேற்றதற்கு நன்றி தெரிவித்தார். மார்ட்டினின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Tags :
Advertisement