ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முனைவர் பட்டம் பெற்றவர் மனு!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்பவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக ஆளுநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் துறை கவுன்சிலின் தலைமை இயக்குனர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் என மொத்தம் 520 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் விழாவில் முனைவர் பட்டத்தை பெற்றுக் கொண்ட இன்பராஜ் என்பவர், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தான் வைத்திருந்த மனுவை வழங்கினார்.
பின்னர் தான் வழங்கிய மனு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இன்பராஜ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களின் படிப்பிற்கான கால அளவு எந்தவித காரணமுமின்றி நீட்டிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
தங்களது எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் இதுகுறித்து யாரும் வெளியே கூறுவதில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.