ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் - இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே 4 போட்டிகள் முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி மழையால் டிரா செய்யப்பட்டது.
இந்நிலையில், கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. முதல் இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடிய கே.எல்.ராகுல் 4 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அடுத்தடுத்து விளையாடிய வீரர்களும் பெரிய அளவில் ரன்களைக் குவிக்காமல் விக்கெட்டை இழந்தனர்.
அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் அடித்தார். தொடர்ந்து 72.2 ஓவர்களில் இந்திய அணி 185 ரன்கள் மட்டும் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.