இடிந்து விழும் வீடுகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் இன்றைய நிலை என்ன? - சிறப்பு தொகுப்பு!
சென்னை பட்டினம்பாக்கத்தில் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம், மேற்கு மாம்பலத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து என குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் உயிர் பயத்துடனே வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் இன்றைய நிலை குறித்தும் அதில் வசிக்கும் மக்களின் பயம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement
முழுவதுமாக சேதமடைந்த சுவர்கள்... அடிக்கடி உடைந்து விழும் பால்கனிகள்... எப்போது வேண்டுமானாலும் பெயர்ந்து விழும் நிலையில் காணப்படும் மேற்கூரைகள் என 24 மணி நேரமும் பொதுமக்களை உயிர் பயத்துடனே வைத்திருக்கும் இவை தான் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள்.
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் அமைந்துள்ள குடியிருப்புகளின் பால்கனி இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலியான துயரத்திலிருந்து மீள்வதற்குள்ளாகவே தற்போது அதே குடியிருப்பில் மற்றொரு பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்கள் வாழத்தகுதியற்ற இடம் என என அறிவித்த பின்னரும், மாற்று ஏற்பாடுகளை செய்து தராத அரசு நிர்வாகத்தால், உயிருக்கு பயந்து கொண்டே அங்கேயே வாழக்கூடிய சூழலுக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு நிர்வாகம் மாற்று இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்கும் பட்சத்தில் உடனடியாக வெளியேற தயாராக இருப்பதாகவும் அக்குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை பட்டினம்பாக்கம் குடியிருப்புகள் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே கட்டி முடிக்கப்பட்டு 50 ஆண்டுகளை கடந்த குடியிருப்புகளின் நிலை அனைத்தும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்பின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்திருக்கும் சம்பவமும் அதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.
குடியிருப்புகளை காலி செய்யுமாறு கூறும் அரசு அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகள் குறித்து எதையுமே தெரிவிக்கவில்லை என கூறும் குடியிருப்புவாசிகள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகளை விட்டு வெளியேறியவர்களுக்கு தற்போது வரை புதிய குடியிருப்புகள் ஒதுக்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்
அடிக்கடி ஏற்படும் விபத்துகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வல்லுநர் குழு 50க்கும் அதிகமான குடியிருப்புகள் பொதுமக்கள் வாழத் தகுதியற்றவை எனவும், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அரசுக்கு பரிந்துரை வழங்கியது. ஆனாலும் பழுதடைந்த குடியிருப்புகளை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பழுதடைந்த குடியிருப்புகளை உடனடியாக அகற்றுவதோடு, ஆண்டாண்டு காலமாக குடியிருக்கும் தங்களை வெளியேற்றுவதற்கு முன்பாகவே மாற்று ஏற்பாடுகளை செய்துத் தர வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.