இடியாப்ப சிக்கலில் இண்டி கூட்டணி ; வெளியேற விரும்பும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் - சிறப்பு கட்டுரை!
தலைமைக்கான நாற்காலிச் சண்டை தீவிரமடைந்திருப்பதால் இண்டி கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
2023-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி... இந்திய ஊடகங்கள் பீகார் தலைநகர் பாட்னாவை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. 2014-ஆம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு முதன்முறையாக மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் முக்கியக் கட்சிகள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றதே அதற்கு காரணம்.
அப்படி ஓர் கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்தவர் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, தி.மு.க., ராஷ்ட்ரிய ஜனதா தளம், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா, இடதுசாரிகள் என இந்தியாவின் முக்கியக் கட்சிகள் அனைத்தும் ஆளும் பா.ஜ.க.-வை வீழ்த்துவதற்காக கைகோர்த்தன.
கொள்கை தொடங்கி நிறைய வேறுபாடுகளை கொண்ட கட்சிகள் ஒற்றைப் புள்ளியில் இணைந்தது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது உண்மை. ஆனால் இந்தக் கூட்டணிக்கு தலைமை ஏற்கப்போவது யார்? ஒருங்கிணைப்பாளர் யார்? எல்லாவற்றுக்கும் மேலாக பிரதமர் வேட்பாளர் யார்? என அடுத்தடுத்து கேள்விகளும் வரிசை கட்டின.
பாட்னாவைத் தொடர்ந்து பெங்களூரு, மும்பை, டெல்லி என ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்ற போதும் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. எனினும், தங்களுக்கு ‘இண்டி கூட்டணி’ என பெயர் வைத்துக் கொண்டவர்கள் அதற்கு தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தேர்ந்தெடுத்தார்கள்.
அதன் பயன் என்ன தெரியுமா? கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ்குமார் அதிலிருந்து முதல் ஆளாக வெளியேறினார். பிரதமர் வேட்பாளர் கனவில் இருந்தவருக்கு கூட்டணித் தலைவர் பதவியைக்கூட கொடுக்காமல் போனால் வேறு என்ன செய்வார்? அதே கனவில் இருந்த மற்றொரு தலைவரான மம்தா பானர்ஜியும் இறுதிவரை கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டேதான் இருந்தார்.
தொகுதிப் பங்கீட்டிலும் பல பிரச்னைகளைச் சந்தித்தது இண்டி கூட்டணி. எல்லாவற்றுக்கும் காரணம் காங்கிரஸின் பெரியண்ணன் மனப்பான்மைதான் என குற்றம்சாட்டப்பட்டது. ஏற்கனவே நாட்டை ஆண்ட கட்சி என்பதாலும் பா.ஜ.க.வுக்கு மாற்று தாங்கள்தான் என்று நினைப்பதாலும் காங்கிரஸ் அப்படி நடந்துகொண்டதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ஆனால் அக்கட்சி அப்படி நினைத்தாலும் கள நிலவரம் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை. அதை ஏற்க மறுப்பதால்தான் காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தேர்தல் வெற்றிகள்தான் கூட்டணியை தக்கவைத்திருக்கும். அப்படி இல்லையென்றால் ஒன்று கூட்டணி உடையும் அல்லது தலைமையை மாற்ற வேண்டும் என்ற குரல் எழும். அந்த நிலைக்கு தற்போது வந்திருக்கிறது இண்டி கூட்டணி.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படவில்லை என்ற அதிருப்தி இண்டி கூட்டணிக் கட்சி தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது. அதனால் தலைமையை மாற்ற வேண்டும் என்று பேசத்தொடங்கியிருக்கிறார்கள். இல்லை.. இல்லை... வலியுறுத்த தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த சர்ச்சைக்கு அடித்தளமிட்டவர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிதான். தனியார் தொலைக்காட்சிக்கு அண்மையில் பேட்டியளித்த அவர், "இண்டி கூட்டணியை முன்னின்று நடத்துபவர்களால் அதனை நடத்த முடியாவிட்டால் தாம் என்ன செய்ய முடியும்? அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் சொல்கிறேன்" என்றார்.
"நீங்கள் ஏன் கூட்டணிக்கு தலைமை தாங்கக்கூடாது?" என்ற கேள்விக்கு, "வாய்ப்புக் கொடுத்தால் இண்டி கூட்டணியை சிறப்பாக நடத்துவேன். மேற்கு வங்கத்தை விட்டு வெளியில் செல்லாமலேயே என்னால் கூட்டணியை வழி நடத்த முடியும் என்றார்.
அவரது கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா Uddhav Balasaheb Thackeray கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
ராகுலின் தன்னிச்சையான செயல்பாடுகள் இண்டி கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சரத்பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கருதுகின்றனர் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டதொடரில் தங்கள் மாநிலம் சார்ந்த முக்கிய பிரச்னைகளை எழுப்ப இண்டி கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்திருந்தன. உதாரணமாக மழை பாதிப்புக்கு கூடுதல் நிதி கேட்க திமுகவும், சம்பல் பிரச்னையை எழுப்ப சமாஜ்வாதியும் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால் அதானி விவகாரத்தை முன்வைத்து ராகுல்காந்தி நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருவதால் ஆக்கப்பூர்மான பிரச்னைகளை பேச முடியவில்லை என கூட்டணிக் கட்சிகள் நினைப்பதாக சொல்லப்படுகிறது.
மற்றொருபுறம் விரைவில் நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துக் களம்காண முடிவுசெய்துவிட்டது ஆம் ஆத்மி, தொடர் தோல்விகள், நாடாளுமன்றம் முடக்கம் என அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸுக்கும் ராகுல் காந்திக்கும் எதிராக திருப்பியிருக்கின்றன.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் முகமாக முன்னிறுத்தப்பட்டார் ராகுல் காந்தி. அதன் பயனாக முன்னெப்போதும் இல்லாத தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ் கட்சி. ராகுல் என்ற BRAND தவிடு பொடியாக்கப்பட்டது. தேர்தல் தோல்விக்கு ராகுல் மட்டும் காரணமல்ல என்று சிலர் சொன்னாலும் அதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார்.
தற்போது அதே போன்றொரு முடிவை அவரது கட்சியிடம் இருந்து எதிர்பார்க்கிறது இண்டி கூட்டணி. இது பற்றி ராகுலிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துச் செயல்பட வேண்டும் என யோசனை தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸும் ராகுலும் என்ன செய்யப்போகிறார்கள்? கூட்டணிக் கட்சியான தி.மு.க. என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம்.